வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை: வடமதுரை காவல் நிலையம் முன் பெற்றோருடன் பெண் தர்ணா


திண்டுக்கல்: வரதட்சணைக் கேட்டு துன்புறுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்து பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால், வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் தரையில் அமர்ந்து பெண் ஒருவர் தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் மணி முருகன். கணவர் குடும்பத்தினர், 5 பவுன் நகை, ரூ.3 லட்சம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாகக் கூறி, வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகா லட்சுமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரிக்கிறோம் என ஆய்வாளர் உள்ளிட்டோர் காலம் கடத்தி வந்துள்ளனர்.

பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாததால், நேற்று மகாலட்சுமி தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், தனது கணவர் குடும்பத்தினருக்கு சாதகமாக போலீஸார் நடந்துகொள்வதாகக் கூறி, அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் தனது பெற்றோர், உறவினருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து, போலீஸார் மகா லட்சுமியை சமாதானப்படுத்தினர். பின்னர், விசாரணைக்காக மகா லட்சுமியின் கணவர் மணி முருகன், மாமனார் புத்தர் ஆகியோரை அழைத்தனர். இதையடுத்து, போராட்டத்தை மகாலட்சுமி கைவிட்டார்.

x