தமிழகத்தில் மார்ச் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 7-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 15 செமீ, தென்காசி மாவட்டம் கடனா அணையில் 13 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 12 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 11 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 10 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் அணைகெடங்கு, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது