தமிழகத்தில் போதிய அளவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இல்லை. புலன் விசாரணை சரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. அதனால்தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்கப்படாததால்தான், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2015 முதல் 2022 வரை போக்சோ சட்டத்தின்கீழ் மொத்தம் 21,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20,303 வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்துள்ளன. அதில் 2,023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 6,110 வழக்குகளில் (30 சதவீதம்) போதிய ஆதாரம் இல்லை என்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 12,170 வழக்குகள் (60 சதவீதம்) இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் முடங்கி கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளன.
தமிழகத்தில் போதிய அளவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததும், புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளாததும்தான் இதற்கு காரணம். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றமும், 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால், 2 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளும், 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் குறைந்தது 53 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இருக்க வேண்டிய நிலையில், 20 நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன.
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் தேவையான அளவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்