இந்தியாவின் 181.74 லட்சம் கோடி கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு ? - அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதிலடி


சென்னை: 2014ம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக் கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா? என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ? தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை மத்திய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத் தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”இந்த மாதம் 14ம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, முதல்வர் ஸ்டாலின் ?’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

x