சென்னை: ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே ? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியது தானே ? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும் ? ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள 6வது கடிதத்தில், "அன்பு உடன் பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும், இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம் குறித்த ஆறாவது மடல். எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை, தேசிய கல்விக் கொள்கை வழியாக மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் சதியினை உணர்ந்துதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதனை எதிர்க்கிறது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகவே என்றென்றும் சிந்திப்பதை யும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதையுமே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் ஏஜெண்ட்டுகளும் மட்டுமே மொழித் திணிப்பை
ஆதரித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆளுநர் ஆர்என் ரவி அது போலப் பேசியிருப்பது புதியது மல்ல, பொருட்படுத்த வேண்டியதுமல்ல.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் என பாஜக-வும், பாஜக கூட்டணியும் ஆட்சி செய்கின்ற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வட இந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள் ? ஆளுநரிடமும் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது.
இந்தி ஆதிக்கத்தால் தனது சொந்த மாநிலங்களிலேயே 25-க்கும் மேற்பட்ட வட இந்திய மொழிகள் பேச்சுவழக்கையும், எழுத்து வடிவத்தையும் இழந்து அழிந்து போனதையும், அழிவின் விளிம்பில் இருப்பதையும் இந்தத் தொடர் மடலின் மூன்றாவது கடிதத்தில் பட்டியலிட்டு எழுதியிருந்த துடன், அதனைச் சமூக வலைத் தளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன். உங்களில் ஒருவனான நான் சொல்வது, ஆதாரத்துடன் கூடிய உண்மை என்பதை இந்திய ஒன்றியத்தின் வடமாநிலங்களைச் சேர்ந்த தோழர்களே ஆதரித்துப் பதிவிட்டிருக்கிறார்கள்.
Marineravin என்ற தோழர் தன்னுடைய ”X” எக்ஸ் தளப் பதிவில், “என்னுடைய தாய் மொழி மகஹி. நான் ஸ்டாலின் சொல்துடன் இங்கே உடன்படுகிறேன். எங்களின் புதிய தலைமுறையினர் மகஹி மொழியைப் பேசுவதுமில்லை, அதை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. இந்தித் திணிப்பைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மகஹி என்ற மொழி பீகார் – மேற்கு வங்காள மாநிலங்களில் பேசப்படுகிற மொழி. வடஇந்திய மாநிலங்கள் பலவற்றின் தாய்மொழிகளும் அவை சார்ந்த பண்பாடுகளும் இந்திமொழியால் விழுங்கப்பட்டுவிட்டன என்பதையும், இந்தி மொழிக்கு இடந்தராத தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் வைஷ்னாராய் என்பவர்
பதிவிட்டிருக்கிறார்.
சங்கமித்ரா பந்தோபாத்யாய் என்பவர், ‘அன்புள்ள தமிழ்நாடு, இந்தித் திணிப்புக்கு எதிரானப் போரில் முன்னணியில் நிற்பதற்காக என்றென்றும் நினைக்கப்படுவாய்” என்று பதிவிட்டிருக்கிறார். ‘இந்திக்கு இடமில்லை’ என்று தொலை நோக்குப் பார்வையுடன் பேரறிஞர் அண்ணா அவர்களால் கொண்டுவரப்பட்ட இரு மொழிக் கொள்கையால் தமிழ்நாடு இன்று பல துறைகளிலும் அடைந்துள்ள வளர்ச்சியையும், தமிழர்கள் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதையும் பிற மாநில மக்களும் உணர்ந்து, தங்கள் முன்னேற்றத்திற்கான வழியைக் காணும் விழிப்புணர்வைப் பெற்று வருகிறார்கள்.
இந்தி படித்தால் வடமாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை களால் கட்டப்பட்ட பிம்பத்திற்கு மாறாக, இந்தி மட்டுமே அறிந்த அதை மட்டுமே படித்த வடமாநிலங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரக்கூடிய வகையில் இரு மொழிக் கொள்கை நம் மாநிலத்தை உயர்த்தியிருக்கிறது. மரியாதைக்குரிய ஆளுநரும் கூட தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெற்று நிர்வாக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்தான்.
தென்னிந்திய மொழிகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர் தென்னிந்திய மொழிகளிலேயே மூத்த மொழியான தமிழ் மொழிக்கு உரிய மரியாதை தராமல், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியவர். ‘தமிழ்நாடு’ என்ற பெயரை சிதைக்க நினைத்தவர். உலகப் பொது மறையான திருக்குறளைப் படைத்து தமிழின் உலக அடையாளமாகத் திகழும் அய்யன் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி கறைப்படுத்தியவர். தமிழர்கள் அனைவரின் கண்டனத்திற்கும் ஆளானவர். நம் தாய்மொழி மீதோ, திராவிட மொழிக் குடும்பமான தென்னிந்தியா மீதோ உண்மையான அக்கறை செலுத்தாமல், இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்காக மும்மொழித் திட்டத்தை வலியுறுத்துவதுதான் ஆளுநருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வாடிக்கை.
நவோதயா பள்ளிகள் என்ற பெயரிலும், அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் வாயிலாகவும், ஒன்றிய அரசின் அலுவலகங்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி 1986ம் ஆண்டு முன்னெடுக்கப் பட்டபோது, அவற்றுக்கு எதிராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆணைக்கிணங்க களம் கண்ட கழகப் படையில் முன்வரிசை யில் நின்றது உங்களில் ஒருவனின் தலைமையிலான இளைஞரணி. ரயில் நிலையங்கள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிறுவனம், ஒன்றிய அரசின் பிற நிறுவனங்கள் என எங்கெல்லாம் இந்தி எழுத்துகள் கண்ணில்பட்டதோ அங்கெல்லாம் அதனை தார்ப்பூசி அழித்தது இளைஞரணியின் தமிழ்ப் பட்டாளம். இளைஞரணிச் செயலாளர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நானும் இந்தி எழுத்துகளை அழித்து, எதிர்ப்புணர்வைக் காட்டினேன்.
ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியது தானே ? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப் பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும் ? ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது ? அந்தந்த மாநில மொழிகளுக்குரிய உரிமையை நிலைநிறுத்தும் முறையில், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் மத்திய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு.
இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் சதித் திட்டத்தினை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை 1986ம் ஆண்டில் நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தபோது, முன்கள வீரனாக மொழிப் போர்க்களம் கண்டவன்தான் உங்களில் ஒருவனான நான். அப்போது, கோவையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மொழிப் போர்த் தியாகிகளின் படங்களைத் திறந்து வைத்து உரையாற்றுகின்ற வாய்ப்பினை இளைஞரணிச் செயலாளரான எனக்கு வழங்கினார், தமிழுக்காக வாழ்ந்தவரும் தமிழாகவே வாழ்ந்தவருமான நம் தலைவர் கருணாநிதி.
“கிரேக்கத்தை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்று கருதி பார சீக ஏகாதிபத்தியம் ஒரு பெரும் படையெடுப்பை நடத்தியது. எல்லையிலே ஒரு சிறு கிரேக்கப் படையின் வீரர்கள் அதனை எதிர்கொண்டு வீரமரணம் அடைகிறார்கள். அவர்களின் உடல் வீழ்ந்து கிடந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அதில்,
‘இவ்வழிச் செல்லும் மக்காள்- நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர்- நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. நாட்டைக் காக்கும் போரில் தங்கள் உயிரைக் கொடுத்த அன்றைய கிரேக்க வீரர்களுக்கு கழகத் தொண்டர்களாகிய நாம் சளைத்தவர்களல்ல” என்று குறிப்பிட்டேன். ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மன் மொழி திணிக்கப்பட்டதை எதிர்த்து செக்கோஸ்லோவியா என்ற நாடு உருவானதையும், ஆங்கில மொழித் திணிப்பை எதிர்த்து அயர்லாந்து
மக்கள் நடத்திய தீரமிகு போராட்டத்தையும், பங்களாதேஷ் எனும் நாடு உருவானதற்குக் காரணம் பாகிஸ்தான் அரசின் மொழித் திணிப்பே என்பதையும், இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்கம்தான் அங்குள்ள தமிழர்களைத் தனி நாடு கேட்டுப் போராட வைத்திருக்கிறது என்பதையும் அந்த உரையிலே எடுத்துரைத்து, “அரசியல் சட்டத்தினுடைய 17ஆம் பாகத்தில் ஒரு பிரிவை ஒரு தாளில் எழுதிக் கொளுத்துகின்ற போராட்டத்தை நம் தலைவர் அறிவித்திருக்கிறார். அப்படிப்பட்ட போராட்டத்தில் கொளுத்துகின்ற அந்தத் தீ, இன்றைக்கு இந்தித் திணிப்பை நடத்திக் கொண்டிருக்கிற மோசடிக்காரர்களின் எண்ணங்களுக்கு நாம் வைக்கிற எழுச்சித் தீ” என முழங்கினேன்.
சொன்னதைச் செய்யும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் 1986 இல் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு நடத்தியது. மாநிலமெங்கும் தீ பரவியது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றேன். ஆயிரக் கணக்கான உடன்பிறப்புகள் தாய் மொழி காத்திட சிறை புகுந்தனர். இனமானப் பேராசிரியர் பெருந்தகை உள்ளிட்ட கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரின் பதவியைப் பறித்தார் அ.தி.மு.க அரசின் அன்றைய பேரவைத் தலைவர்.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளை நீதிமன்றத்தில் வாக்கு மூலமாக அளித்து, சிறை கண்ட நம் உயிர் நிகர்த் தலைவர் கருணாநிதிக்கு, கைதிகளுக்கான கட்டம் போட்ட சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிவித்து அவரது கையில் தட்டும் குவளையும் வழங்கினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். தமிழே உயிரெனக் கொண்ட நம் தலைவர் சிறைக் கொடுமைகளைச் சிரித்த படியே எதிர்கொண்டார்.
பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித் திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றும், சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மை மொழி என்றும் சொல்லி இரண்டையும் திணிக்க நினைக்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற இரண்டுமே வடிகட்டிய பொய் என்பதை வரலாறு சொல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.