ஈரோடு: மாநகரப் பகுதியில், ஓராண்டில் 6,600 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகர் மற்றும் கிராமப் பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள், பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு, கோழி போன்றவற்றை கடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், வாகன ஓட்டிகளை துரத்தி விபத்துக்கும் வழிவகுத்து வருகின்றன.
தெரு நாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை பணிகளை விரைவு படுத்த வேண்டும், என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ஈரோடு கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிராணிகள் நல வாரியப்படி நாய்களைக் கொல்ல முடியாது. அவற்றை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு முறையான அறுவை சிகிச்சைக் கூடம், அரசு அனுமதி பெற்று செயல்பட வேண்டும். மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் இத்தகைய கருத்தடை கூடம் இயங்குகிறது.
மேலும், பயிற்சி பெற்றவர்கள் மூலமே நாய்களை பிடிக்க வேண்டும். அவற்றைக் கொன்று விடக்கூடாது. பிடிபட்ட நாய்க்கு முறையாக உணவு வழங்கி 5 நாட்களுக்கு ஆரோக்கியம் பேணி கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும். அதன் பின்னர் மீண்டும் 5 நாட்கள் பராமரித்து எங்கு பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் திரும்ப விட வேண்டும்.
இதுபோன்ற வசதிகளை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏற்படுத்த இயலாது. நாய்களைப் பிடிக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான அமைப்பை ஏற்படுத்த மாவட்ட அளவிலான கமிட்டியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 6,600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.