கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி


சென்னை: கோயம்பேடு சந்தையில் காய் கறிகளின் விலை சரிந்துள்ளது. கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், சாதகமான தட்ப வெப்ப நிலை காரணமாக காய் கறிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து அவற்றின் விலை குறைந்துள்ளது. அதன்படி. முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை தலா ரூ.8 ஆகவும், பீட்ரூட், கத்தரிக்காய், நூக்கல், அவரைக்காய் தலா ரூ.10 ஆகவும் சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை உச்சத்தில் இருந்த தக்காளி, தற்போது கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டு வருகிறது.

வெளிச் சந்தைகளில் சில்லறை விற் பனையில் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை குறைவால், தேனி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கிலோ ரூ.5-க்கு கூட விலை போகவில்லை. இதனால் பரிக்கும் கூலிகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் இப்போது கிலோ ரூ.40 ஆக விலை குறைந்துள்ளது. இது ஓட்டல் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மற்ற காய் கறிகளான கேரட், உருளைக் கிழங்கு, புடலங்காய், தக்காளி தலா ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.18, பாகற்காய், வெண்டைக்காய் தலா ரூ.20. பீன்ஸ் ரூ.25, சாம்பார் வெங் காயம் ரூ.30 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக காய்கறி வியாபாரிகள் கூறும்போது. "வழக்கமாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை காய் கறிகள் உற்பத்தியும். சந்தைக்கு வரத் தும் அதிகமாகவே இருக்கும். அதனால் காய்கறிகளின் விலை யும் குறையும். வரும் மே மாதத்தில் மீண்டும் காய்கறி விலை உயர வாய்ப்புள்ளது” என்றனர்.

x