மானிய விலையில் தென்னங்கன்றுகள்; நடவுக்கும் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு


உடுமலை: தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் தென்னங்கன்றுகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை, தளி திருமூர்த்தி நகரில் செயல்பட்டு வரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவ மையம், நாற்றுப்பண்ணை மூலம் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு, தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குநர் ரகோத்துமன் கூறியதாவது: சான்று பெற்ற தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளன. குட்டை ரகங்கள், நெட்டை ரகம் ஒரு கன்று ரூ.80-க்கும், குட்டை ரகம் மற்றும் இளநீர் ரகம் ரூ.100-க்கும் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு 25 சென்ட் முதல் 4 ஹெக்டேர் வரை நடவு மானியம் வழங்கப்படுகிறது. நெட்டை ரகத்துக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,500, குட்டை ரகத்துக்கு ரூ.7,500 நடவு மானியம் வழங்கப்படுகிறது. தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகளும், நடவு செய்ய மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

x