விருதுநகர்: சாத்தூர் கனிம வள கொள்ளை விவகாரத்தில், துணை வட்டாட்சியர் உட்பட 4 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு (17-ஏ) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாயில் விவசாயப் பயன்பாட்டுக்கு என இலவசமாக வண்டல் மண் எடுக்க, போலி உரிமம் பெற்று 30 அடி ஆழம் வரை விதிமீறி கிராவல் மண் அள்ளியதாகப் புகார் எழுந்தது. வருவாய்த் துறையினர் விசாரணை யில், கனிம வள கொள்ளை நடந்தது உறுதியானது. இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மண் கடத்த பயன்படுத்தப் பட்ட 12 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கனிம வள கொள்ளையை தடுக்க தவறியதுடன் உடந்தையாக இருந்ததாக, சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன், துணை வட்டாட்சியர் நவ நீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அஜிதா, கிராம உதவியாளர் குரு சாமி ஆகிய 5 வருவாய்த் துறையினர், வேளாண் உதவி அலுவலர் முத்து குரு, நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அனிதா ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதுகுறித்து சிறப்பு டிஆர்ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 5 வருவாய்த் துறையினர், வேளாண் உதவி அலுவலர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். நீர்வளத் துறை உதவிப் பொறியாளரை, தலைமை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யவில்லை. வேளாண் உதவி அலுவலரின் சஸ்பெண்ட் உத்தரவை, வேளாண்மை இணை இயக்குநர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகிய 4 பேர் மீதான சஸ்பெண்ட் (17-இ) உத்தரவு ரத்து செய்யப்பட்டு, விளக்கம் கேட்டு (17-ஏ) நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. வட்டாட்சியர், வேளாண் உதவி அலுவலர், உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு (17-பி) நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயம் மற்றும் மண் பாண்டத் தொழிலுக்கு இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்க, தமிழக அரசு உருவாக்கிய வலை தளம் ஒரு முறை அனுமதி பெற்ற சர்வே எண்ணுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாதவாறு வடிவமைக்கப்படவில்லை. மேலும், விண்ணப்பதாரரின் தகவல்களை உறுதி செய்ய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புதல் மற்றும் இரட்டை சரி பார்ப்பு முறை இல்லாதது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாட் டால், போலியான அனுமதி சான்றை எளிதாக பெற்று விடுவதாக வருவாய்த் துறையினர் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வளவு பிரச்சினைகள் எழுந்த நிலையிலும், விருதுநகர் மாவட்டக் கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி பெறும் வலை தளம் இன்னும் முடக்கப்படாமல் பயன்பட்டி லேயே உள்ளது.
கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?: கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய தாகக் கூறப்படும் டைரியில், அதிகாரிகளுக்கு அளித்த லஞ்சப் பண விவரம் குறித்த சில பக்கங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அந்த டைரியின் உண்மைத் தன்மை குறித்தோ, கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தோ எந்த தகவலும் இல்லை.
கனிம வள கொள்ளை குறித்த விசாரணையை, மாவட்ட நிர்வாகம் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும். விவசாயிகளின் போர்வையில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எடுக்கப்பட்ட மண்ணுக்கு உரிய சந்தை மதிப்பு தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.