வெள்ளரிக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனை: பழநி பகுதிகளில் சாகுபடி அமோகம்


பழநி: பழநியில் வெள்ளரிக்காய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கு விற்பனையாகிறது.

பழநியில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள் ளது. கடும் வெப்பம் காரணமாக சாலை யோரம் உள்ள இளநீர், ஜூஸ், கம்பங்கூழ் கடை களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதேபோல், வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுவதால் வெள்ளரி விற்பனை களைகட்டியுள்ளது. பழநி ஆயக்குடி. சட்டப்பாறை. நெய்க்காரப்பட்டி, அமரபூண்டி ஆகிய பகுதிகளில் வெள்ளரி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் வெள்ளரிக்கு மவுசு அதிகரித்துள்ளது. வியாபாரிகள், அறுவடை செய்யப்படும் இடங்களுக்கு நேரடியாக சென்று வாங்குகின்றனர். அதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் குறைந் துள்ளது. அதே சமயம், ஒரு பெட்டி (20 கிலோ) ரூ.1,000-க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கும் விற்பனையா வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து ஆயக்குடி பகுதி விவசாயிகள் கூறியதாவது: கோடை காலம் தொடங்க இருப்பதால் வெள்ளரிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெயில் சுட்டெரிப்பதால் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளரியை வாங்க வியாபாரிகள் வருகின்றனர். தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் 3 மாதங்களுக்கு வெள்ளரிக்காய் மட்டுமின்றி வெள்ளரி பழமும் நன்கு விற்பனையாகும் என்பதால் வெள்ளரி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடவு செய்த 40-வது நாளில் இருந்து வெள்ளரி அறுவடை நடைபெறும். இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிக்கும் போது வெள்ளரி விலை குறைய வாய்ப்புள்ளது. கிலோ ரூ.50-க்கு மேல் விற்றால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், என்று கூறினர்.

x