மதுரை: மதுரை மேற்குத் தொகுதி அதிமுகவின் கோட்டை. அதை யாராலும் கைப்பற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்களின் கூட்டணியை கொள்கை கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அந்த கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் அவ்வாறு கூறவில்லை. தங்களின் கட்சிக் கொடியை கூட ஏற்ற முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் புகார் தெரிவிக்கிறார். திமுக அரசை ஆதரித்து வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்போது எதிர்க்கின்றனர். சீமான் தனது அருகே பெண்களை நிற்க வைத்துக் கொண்டே, மற்றொரு பெண்ணை பற்றி இழிவாகப் பேசுகிறார்.
பொது இடத்தில் பெண்களை பற்றி அவர் மரியாதையாக பேச வேண்டும். நாங்கள் விஜய்யை கூட்டணிக்கு அழைத்தோமா என்பது பற்றி அவர்கள் தான் கூற வேண்டும். இந்த விவகாரம் பற்றி அவர்களிடம் கேள்வி கேளுங்கள். அதிமுக ஆட்சி அமைக்க, பழனிசாமி முதல்வராக எங்கள் கட்சியை நம்பி யார் வருகிறார்களோ, அவர்களை இணைத்துக் கொண்டு தேர்தல் களத்துக்குச் செல்லப் போகிறோம். மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. அதை யாராலும் கைப்பற்ற முடியாது.
இந்தத் தொகுதியில் சாதாரண தொண்டரை நிறுத்தினாலே அதிமுக வெற்றி பெற்றுவிடும். அமைச்சர் பி.மூர்த்திக்கு சவால் விடுகிறேன். அவர் அமைச்சராக வந்தார். திருமண மண்டபம் கட்டினார் என்பது பெரிதல்ல. அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பது தான் முக்கியம். முதலில் மதுரைக்கு சிறப்பு நிதியை வாங்கித் தாருங்கள். திட்டங்களைக் கொண்டு வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.