சென்னை: தமிழகத்தில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6,975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு 4,581 ஆக இருந்தது. தற்போது 52.30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இத்தகைய குற்றங்களைச் செய்தால் தண்டிக்கப்படுவது உறுதி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலம் என்ற நிலை ஏற்படக் கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தருவதன் மூலமாகவும், குற்றங்களை தடுப்பதன் மூலமாகவும் தமிழகத்தில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.