மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, ராமேசுவரம் செம்மடம் பகுதியில் மனோலயா மனநல காப்பகக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநரை, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வரவேற்றார்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரும் வழியில், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக நடைபெற்ற மீனவர்களின் காத்திருப்புப் போராட்டப் பந்தலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். மீனவப் பிரதிநிதிகள் அவரை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் மீனவர்கள் ஆளுநரிடம், தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அங்கு அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர், மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக உறுதி அளித்தார்.
அநியாய ஒப்பந்தம்: இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ராமேசுவரத்துக்கு நான் சென்றபோது, துன்பத்தில் உழலும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். 1974-ம் ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த அரசுகள், கச்சத்தீவு கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து, பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கப்பூர்வ அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால், அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்