மீனவர் கைது நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியது, தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித் திட்டம் ஆகியவற்றை திசை திருப்புவதற்காக, கச்சத்தீவு விவகாரத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்புகிறார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு விவகாரத்துக்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று துருப்பிடித்த குற்றச்சாட்டை மீண்டும் கிளப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசின் இயலாமையை மறைக்க ஆளுநர் ரவி இவ்வாறு தமிழக அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார்.
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தை கொடுத்ததே அப்போதைய திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதிதான். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்து, அவையை விட்டு வெளியேறியது திமுக. மேலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. இந்த உண்மைகள் எல்லாம் வரலாற்றைப் படிப்பவர்களுக்கு தெரியும். ஆனால் வாட்ஸ்-அப்பில் வரும் வதந்திகளை வரலாறாகக் கருதும் ஆளுநருக்கு இதெல்லாம் தெரியாதுதான்.
1974-ல் பறிபோன கச்சத்தீவைப் பற்றி கவலைப்பட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் 2,000 சதுர கி.மீ. பகுதிகளை சீனா ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில், மோடி அரசு கச்சத்தீவை கண்டிப்பாக மீட்கும்என்று சொன்னவர்கள் தற்போது எங்கே போனார்கள்.
தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித்திட்டம் அம்பலத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் கச்சத்தீவு விவகாரத்தைக் கிளப்புகிறார்கள். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய பிரதமர் மோடியிடம், ஆளுநர் கோரிக்கை விடுக்க வேண்டும். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் அவரோடு போட்டியிட வேண்டாம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்