தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உத்தரப் பிரதேச ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாளுக்கு நாள் புதிய புதிய கட்சிகள் வந்தாலும், காங்கிரஸ்தான் பாரம்பரியமான கட்சி. கட்சியினரின் பிள்ளைகளையும் கட்சியில் சேர்க்க வேண்டும். தமிழகத்துக்கு இருமொழிக் கொள்கையே போதும். மும்மொழிக் கொள்கை தேவையற்றது. நான் மெட்ரிக் பள்ளியில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில்தான் படித்தேன். அதேபோலதான், என மகளும் படிக்கிறார்.
வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வேலை செய்ய வருபவர்கள் திருக்குறள், ஆத்திச்சூடியை முன்கூட்டியே படித்துவிட்டு வருவதில்லை. இங்கு வந்த இடத்தில் தமிழைக் கற்றுக்கொள்கிறார்கள். அதுபோலவே, தமிழர்கள் வேலைக்காக வடமாநிலம் செல்லும்போது, அங்கு இந்தியைக் கற்றுக் கொள்கிறார்கள். அதற்காக இந்தியை கட்டாயமாக்குவது தேவையற்றது. இது பாஜகவின் சூழ்ச்சி. தமிழகத்தின் கலாச்சாரம், மொழியை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால், தமிழகத்தின் பள்ளிகளில் இந்தி ஆசிரியர் இல்லை எனக் கூறி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து இந்தி ஆசிரியர்களை அனுப்புவார்கள். தற்போது வங்கி, ரயில்வே, அஞ்சல் அலுவலகங்களில் தமிழ் மொழி தெரியாதவர்கள் பணிபுரிவதைப் போன்று பள்ளிகளும் மாறும். இதுதான் மத்திய அரசின் சூழ்ச்சி. எனவே, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழக முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.