திருப்பூர் மாநகராட்சி பள்ளி ஆண்டு விழாவுக்கு சிறுமியின் உண்டியல் சேமிப்பு பணம் வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு புது ராமகிருஷ்ணாபுரம் தொடக்கப் பள்ளியில், கடந்த ஜூலை மாதம் மாணவர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ’சிறு துளி பெருவெள்ளம்’ என்ற தலைப்பில் 332 மாணவர்களுக்கும் உண்டியல் வழங்கப்பட்டது. வரும் 14-ம் தேதி பள்ளி ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில், உண்டியலில் அதிகமாக சேமித்த மாணவர்களுக்கு வகுப்பு, பிரிவு வாரியாக முறையே மூன்று பரிசுகள் வீதம் 11 பிரிவுகளிலுள்ள 33 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வகுப்பு ஆசிரியர்கள் கூறியதையடுத்து, கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட உண்டியல்களை பள்ளிக்கு மாணவ, மாணவிகள் கொண்டுவந்தனர். இதையடுத்து, வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் எண்ணி, எவ்வளவு ரூபாய் என்பதை குறித்து வைத்துக் கொண்டனர். மாணவர்கள் சேமித்த பணத்தை பெற்றோர் வசம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இதில், 2-ம் வகுப்பு பயிலும் சிறுமி சீத்தா லட்சுமி பால் ராஜ் என்ற மாணவி, தான் சேமித்து வைத்திருந்த ரூ.3189-ஐ பள்ளி ஆண்டு விழா செலவுக்கு தலைமை ஆசிரியர் சு.மோகனிடம் வழங்கினார். சிறுமியின் செயலை பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.