மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி: பணியில் இருந்த செவிலியர் மயங்கி விழுந்து திடீர் மரணம்


மயிலாடுதுறை: மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி (30). இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் திருமணமான நிலையில், தற்போது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

கடநத 2 ஆண்டுகளாக மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்து கொண்டு சென்ற இரவு உணவை 8.30 மணியளவில் தையல்நாயகி சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தையல் நாயகியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த சுகாதார நிலைய அலுவலர்கள், அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தையல் நாயகி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மணல்மேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x