தஞ்சை: திருவாரூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் நகர் பகுதி, வடபாதிமங்கலம், கமலாபுரம், மாங்குடி, சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது.
இதனால், மாவட்டத்தில் நடைபெறும் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மழை தொடர்ந்தால் சம்பா நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து, மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரிகள், கொள்முதல் நிலையங்களுக்கு வந்து நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் பணியும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கெனவே மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தார்ப்பாய் கொண்டு நெல் மூட்டைகள் மூடி இருந்தாலும், தரைத்தளத்தில் போதிய மரக்கட்டைகள் கொண்டு அடுக்கப்படாததால் அவை நனையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் வலிவலம், சூரமங்கலம், பையூர், பாங்கல், உத்திரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சில நனைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, மழை ஓய்ந்த பின் உடனடியாக கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும் விவசாயிகளின் நெல் மூட்டையை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக, திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்திருக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.