ராமநாதபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ராமேசுவரம் கோயில் முன்னாள் இளநிலை உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் சந்திரன் (75). இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. அதனையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1999 வரை தனது பெயரில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.21,70,793 (984.12 சதவீதம்) சொத்து சேர்த்ததாக தெரிய வந்தது.
இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெறும் வயதில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் நேற்று தலைமை குற்றவியல் நீதிபதி மோகன்ராம், முன்னாள் இளநிலை உதவியாளர் சந்திரனுக்கு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.