திருப்பத்தூர்: பாலியல் வழக்கில் கைதான ஆங்கில ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் சாலையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், மலைரெட்டியூர் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஊத்தங்கரையைச் சேர்ந்த பிரபு என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி 7ம் வகுப்பு மாணவிகளுக்கான கணினி தேர்வு பள்ளியில் நடைபெற்றது.
இந்ததேர்வில் கலந்துகொண்ட 6 மாணவிகளிடம், ஆசிரியர் பிரபு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையம் எண் 1098-க்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ மலைரெட்டியூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு வந்து, 6 மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, ஆங்கில ஆசிரியர் பிரபு தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் எழுத்துப் பூர்வமாக வாக்கு மூலம் அளித்தனர்.
அதனடிப்படையில் கடந்த 24-ம் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான காவல் துறையினர் மலைரெட்டியூர் பகுதிக்கு சென்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகொடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட ஆசிரியர் பிரபு மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாலியல் வழக்கில் கைதான ஆங்கில ஆசிரியர் பிரபு எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக்கூறி மலைரெட்டியூர் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பொய் வழக்கில் கைதான ஆசிரியர் பிரபுவை விடுவிக்க வேண்டும் என மாணவர்கள் முழக்கமிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப் பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வாணியம்பாடி வட்டாட்சியர் உமாரம்யா மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியர் கைது விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையேற்ற மாணவர்கள் 2 மணி நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.