எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்... டங் ஸ்லிப்பால் வைரலான திண்டுக்கல் சீனிவாசன்!


தூத்துக்குடி: தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது என, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முக நாதன், மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: திமுகவில் வாரிசு அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நிதிக்காக மும்மொழி கொள்ளையை ஏற்றுக்கொண்டு, ஆதரித்து கடிதம் கொடுத்துவிட்டு, மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன், இன்று எதிர்ப்பது போல் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர்.

அதிமுகவில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது. 200 தொகுதிக்கு மேல் அதிமுக வெற்றிபெற்று பழனிசாமி முதல்வராக வருவார். சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நல்லாட்சி தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைரலாக பரவிய பேச்சு: கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கனிமொழி எம்.பி. நாடாளு மன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. 525 வாக்குறுதிகளை 2021 தேர்தலில் கொடுத்து எப்படி எடப்பாடி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாரோ, அதே போன்று நாடாமன்றத்துக்கு 64 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்து இன்று வரை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்” என்று அவர் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு பதிலாக எடப்பாடி என்று, திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x