முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல், விஜய், அண்ணாமலை... வாழ்த்திய தலைவர்கள் லிஸ்ட்!


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘எனது சகோதரரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், அதில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘மு.க.ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று, தமிழக மக்களுக்கு சேவையாற்றிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். வகுப்புவாத பிரிவினையும் கலாச்சார பெரும்பான்மைவாதமும் நமது சமூகத்தை அச்சுறுத்தும் இந்த நேரத்தில், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு உத்வேகமாகவே உள்ளது. ஒன்றாக இணைந்து, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் வேரூன்றிய நமது நாட்டின் உண்மையான சாரத்தை நாம் பாதுகாத்து வலுப்படுத்துவோம். உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்

பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், "மரியாதைக்குரிய மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சமூக நீதி மற்றும் சமத்துவ சமூகம் குறித்த உங்கள் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற கடவுள் உங்களுக்கு நீண்ட, வெற்றிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கட்டும்’ என கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்தில், ‘தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்தில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளை தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, உள்ளிட்ட பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

x