‘மொழிப் போராட்டத்தில் உயிரை இழக்க தயாராக இருந்தேன்’ - கடிதத்தில் முதல்வர் சொன்ன அதிர்ச்சி தகவல்!


சென்னை: இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்போம். மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மறைமுக மொழிக் கொள்கை. இதனை நேரடியாகத் தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தொடர் மடல். தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியைக் காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தை ஆள்கின்ற ‘ஆம் ஆத்மி’ கட்சி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தனது மாநிலத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை முதன்மையாகவும் கட்டாயமாகவும் கற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை ஆள்கின்ற காங்கிரஸ் அரசின் சார்பில் வெளியாகியுள்ள உத்தரவிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த திடீர் அறிவிப்பு?

மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவச் செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பத்தாம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான வரைவு வெளியிடப்பட்டபோது அதில் மாநில மொழிகள் பலவும் விடுபட்டிருந்தன.

இது குறித்து பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சரிடமிருந்து எதிர்ப்புக் குரல் வெளியான பிறகே, சி.பி.எஸ்.இ. வரைவுப் பட்டியல் முழுமையானதல்ல என்றும், எந்த மாநிலத்தின் மொழியையும் எடுக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்போம். மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மறைமுக மொழிக் கொள்கை. இதனை நேரடியாகத் தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. அதன் வழியில் சகோதர மாநிலங்களும் தங்கள் தாய்மொழியைப் பாதுகாக்கும் அரண் அமைக்கும் சட்ட வழிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு மாநிலத்தில் பல வகையான பாடத் திட்டங்களைப் பின்பற்றக்கூடிய பள்ளிகள் உண்டு. எந்த வகைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதனை இன்று பஞ்சாப்பும், தெலுங்கானாவும் உணர்ந்து உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், “தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும்” என சட்டமாக நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

எதிர்கால மாணவச் சமுதாயத்தினர் தாய்மொழியாம் தமிழைக் கற்க வேண்டியது மிகவும் அவசியம் என்ற தெளிவான பார்வையுடன் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்திலும், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞருக்கேயுரிய நடைமுறை எதார்த்தத்துடனான கருணையும் வெளிப்பட்டது. தாய்மொழியைக் கற்பதாக இருந்தாலும்கூட அதனை வலிந்து திணிக்கக்கூடாது என்ற முறையில், முதல் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு எனத் தொடங்கி பத்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளி மாணவர்களும் தமிழைக் கற்றாக வேண்டும் என்கிற வகையில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழாகவே வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் சட்டத்திற்கு நீதிமன்றங்களும்கூட தடை விதிக்கவில்லை.

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக இருந்தாலும், வேறு வகை பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பள்ளிகளாக இருந்தாலும் தமிழ் மொழியைக் கற்றே ஆக வேண்டும் என்ற நிலையை நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அரசு உருவாக்கியதால்தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வரைவை வெளியிட்ட சி.பி.எஸ்.இ., அதில் பிற மாநில மொழிகளைத் தவிர்த்திருந்தபோதும் தமிழைத் தவிர்க்க முடியாத நிலை உருவானது. தமிழ்நாடு வகுத்த பாதையில் மற்ற மாநிலங்களும் தங்கள் தாய்மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டு வருகின்றன.

“இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் நீடிக்கும்” என்ற, முதல் பிரதமர் நேருவின் உறுதிமொழி மீறப்பட்டு, ஆட்சி மொழி – அலுவல் மொழி என்ற வகையில் இந்தி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் என்ற நிலை 1965–ஆம் ஆண்டு இந்தியாவில் உருவானபோது, அதன் பாதிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை முதலில் எச்சரித்த மாநிலம் தமிழ்நாடுதான். எச்சரித்தது மட்டுமல்ல, ‘தமிழ் வாழ்க..இந்தி ஒழிக’ என உச்சரித்தபடியே தன் உடலுக்குத் தானே தீ வைத்துக்கொண்டு மொழி காக்கும் போரில் உயிர் ஈந்த தியாக வரலாறும் தமிழ்நாட்டிற்குரியது.

கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், அய்யம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி எனத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்தும், நஞ்சு அருந்தியும் இந்தித்திணிப்பை எதிர்த்து, தாய்மொழி காத்திட தங்கள் இன்னுயிர் ஈந்தனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன் காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாவுக்கு, தன் மார்பு காட்டி வீரச்சாவு அடைந்தார். கோவை, பொள்ளாச்சி உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் காவல்துறையும், துணை ராணுவமும் நடத்திய வேட்டையில், மொழி காக்கும் போரில் ஈடுபட்ட இளைஞர்களும் மாணவர்களும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.

கொந்தளித்துக் கிளர்ந்தெழுந்த மாணவப் பட்டாளத்தைத் தூண்டி விடும் வகையில் எழுதியதாகவும் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தனர். அதே சட்டத்தில் முரசொலி மாறன் அவர்களும் கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா உள்பட கழகத்தினர் களம் கண்டனர். சிறை சென்றனர். தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி உணர்வுத் தீ, ஆந்திரா தொடங்கி அசாம் வரையிலும் பரவியது. அதன்பிறகே, இந்தித் திணிப்பு முறியடிக்கப்பட்டு, இந்திய ஒன்றிய அரசில் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக – அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இந்திய மொழிகளை ஒவ்வொரு முறையும் காத்து நிற்பது தமிழ்நாடும், தமிழர்களின் மொழியுணர்வும்தான்.

அந்த உணர்வை அரசியல் கணக்காக அணுகாமல், எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கும் கவசமாக்கிடும் வகையில், 1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிட முன்வந்தது. 1968 ஜனவரி 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை முதலமைச்சர் அண்ணா கூட்டினார். “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ்–ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தியை அறவே நீக்கிவிட இப்பேரவை தீர்மானிக்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலத்திற்குரிய சட்டவழியிலான உரிமையை மிகச் சரியாகக் கையாண்டு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய பேரறிஞர் அண்ணா, “என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதை செய்து கொள்ளட்டும்” என்று அறைகூவல் விடுத்தார். ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியாவது தமிழை அழித்து, இந்தி–சமஸ்கிருதத்தைத் திணிக்கலாம் என முயற்சிக்கிறது. அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஆயுதமாகவும் கேடயமாகவும் தமிழைக் காத்து நிற்கிறது.

பேரறிஞர் அண்ணா நம்மை விட்டு மறைந்தபிறகு, இயக்கத்தையும் ஆட்சியையும் தலைமையேற்று வழிநடத்திய நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் 1970–ஆம் ஆண்டு பிப்ரவரி 22–ஆம் நாள் தீரர் கோட்டமாம் திருச்சியில் நடந்த மாவட்ட மாநாட்டில் தி.மு.கழகத்தின் கொள்கை வழிப் பயணத்திற்கான ஐம்பெரும் முழக்கங்களை உடன்பிறப்புகளுக்கு வழங்கினார்.

* அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி –

இவை தான் அந்த முழக்கங்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்கள் ஒவ்வொன்றும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலிருந்து எழும் உணர்வாக உரக்க ஒலிக்கிறது. அதுதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் களத்தில் எதிரொலிக்கிறது. இனம்–மொழி காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் அண்ணா வழியில் அயராது உழைத்த நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் வழியில் உங்களில் ஒருவனான என் தலைமையிலான கழகம், போராட்டக் குணம் மிகுந்த இயக்கமாகச் செயல்பட்டு, இந்திய ஒன்றியத்தின் திசை வழியைத் தீர்மானிக்கிறது.

எப்போதெல்லாம் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் எல்லைப்புறமாகவோ, கொல்லைப்புறம் வழியாகவோ நுழைய முயல்கிறதோ, அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் விழிப்புணர்வுடன் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது.

1971ஆம் ஆண்டு செப்டம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் தி.மு.கழக மாணவர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மொழிப் போர்க்கள வீரர் எல்.கணேசன் தலைமை தாங்கினார். அவரை அண்ணன் வைகோ (அப்போது நெல்லை கோபால்சாமி) அவர்கள் முன்மொழிந்தார். கழகத்தின் இன்றைய பொதுச்செயலாளர் என் அன்பிற்குரிய அண்ணன் துரைமுருகன் அவர்களும், மொழிப்போர்க்களத்தில் மாணவர்களாகக் களம் கண்ட திரு.காளிமுத்து, திரு.இரகுமான்கான், திரு.இராசாமுகமது, திரு.என்.வி.என்.செல்வம், திரு.வலம்புரி ஜான் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் கலந்துகொண்டனர். அப்போது கல்லூரி மாணவனான நானும் அந்த மாநாட்டுப் பணிகளில் பங்காற்றினேன்.

அழைப்பிதழின் உரையாற்றுவோர் பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டாலும், மாநாட்டின் எழுச்சியால் உந்தப்பட்டு, “எனக்குப் பேச வாய்ப்பு கொடுங்கள். இரண்டு நிமிடம் பேசுகிறேன்” என்று மாநாட்டுத் தலைவர் எல்.கணேசனிடம் கேட்டேன். அவரும் அனுமதி தந்தார். கழகத் தலைவர் இருந்த மேடையில் என் பேச்சைத் தொடங்கினேன்.

“மாணவர்களே.. இன்றைக்கு இந்தி திணிக்கப்படுகின்ற முயற்சி தலைகாட்டிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மாணவர் பட்டாளம் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். எந்தப் போராட்டமாக இருந்தாலும், எப்படிப்பட்ட தியாகமாக இருந்தாலும் நம்முடைய மாணவர் பட்டாளம் அதிலே கலந்துகொள்ள வேண்டும் என்று மாநாட்டுத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்தார். அப்படிப்பட்ட மாணவர் பட்டாளத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிற வாய்ப்பை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும். அது எந்தத் தியாகத்தின் பட்டியலாக இருந்தாலும் அதிலே என்னையும் சேர்த்துக்கொள்வதற்கு ஆணையிட வேண்டும்.

மொழிக்காக, நம்முடைய இனத்திற்காகப் போராடுகிறோம். போராடுகிற இந்த நேரத்தில், நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அந்த நான்கு ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். அதுவும் மொழிக்காக, ஒரு இனத்திற்காக, தனயனை இழந்த தந்தை என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்.

அத்தகைய பாராட்டை, பெருமையை வாங்கித் தந்த மகிழ்ச்சியும் என்னைச் சேருமல்லவா? எனவேதான் நான் சொல்கிறேன். எத்தகைய தியாகத்தைச் செய்வதற்கும் தயார்.. தயார்..” – என்று நான் முழங்கினேன்.

தந்தை பெரியார் மூட்டிய தீயை பேரறிஞர் அண்ணா திக்கெட்டும் பரவச் செய்தார். தண்டவாளத்தில் தலை வைத்து தமிழைக் காத்தார் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர். அவர்களின் வழியில்தான் நம் கழகம் என்றும் பயணிக்கும்.

உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம்–மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

“ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்!” என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

x