ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட அனுமதி: திருச்சி அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்


திருச்சி: மணப்பாறை அருகே இடையப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட அனுமதித்த உதவி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது இப்பள்ளியில், பிப்.24-ம் தேதி இதே பகுதியை சேர்ந்த ஓபிஎஸ் அணியைச் நேதாஜி என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர்களின் அனுமதியை பெற்று பள்ளியின் வளாகத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உள்ளார். அப்போது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் மாணவர்களுக்கு காலணிகள், சீருடைகள், மிதி வண்டிகள், லேப்டாப்புகள் வழங்கப்பட்டதாக பேசியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இது குறித்து மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு பலர் புகார் அனுப்பினர். இதையடுத்து, திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் அமுதா உள்ளிட்ட 6 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, விசாரணை நடத்தி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அமுதாவை மருங்காபுரி வட்டாரத்துக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

x