புதுக்கோட்டை: திருமயம் அருகே உள்ள நெய்வாசலில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 171 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு 38 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினார். இதில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு முடிந்தபின்னர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த க.அஜித் குமார்(24), தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய காளையை வீட்டுக்குப் பிடித்துச் செல்ல முயற்சி செய்தார்.
அப்போது, மாடு முட்டியதில் அஜித்குமாருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காரைக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, பொன்னமராவதி அருகே இடையாத்தூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 903 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 31 பேர் காயம் அடைந்தனர்.