மதுரை மாவட்டத்தில் 6,600 பேருக்கு பட்டாக்கள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் மூர்த்தி தகவல்


மதுரை: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் 6,600 பட்டாக்கள் வழங்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை அருகே பரவையில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சிறப்புக் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் என்.ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பி.மூர்த்தி, பொதுமக்களிடம் இருந்து 1,115 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் 4 ஆண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அமைச்சர்கள் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமை நடத்தி தீர்வுகாண அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 6,600 பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும். இதில் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நீர்நிலை, ஓடை, கண்மாய் புறம்போக்குகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டாக்களை வழங்க முடியாது. பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு, தரிசு நிலங்களில் வசிப்போருக்கு மட்டுமே பட்டாக்களை வழங்க முடியும். கடந்த ஆண்டு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பேசினார். சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன், துணை மேயர் தி.நாகராஜன், கோட்டாட்சியர் சாலினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x