செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவு


புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் விசாரணை நிலவர அறிக்கையை மனுதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட 3 குற்ற வழக்குகள், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘அமைச்சராக பதவியில் இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்ததும் அமைச்சராக பதவியேற்றது, ஜாமீன் நிபந்தனைகளை மீறும் செயல். அவர் அமைச்சராக நீடித்தால் சாட்சிகள் தைரியமாக சாட்சியம் அளிக்க மாட்டார்கள். எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த மோசடி வழக்குகள் மீதான விசாரணையை தமிழக போலீஸார் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக குற்றம்சாட்டி ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

சீலிட்ட உறை: இந்த வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுப்படி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிட்ட உறையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்துள்ள நிலவர அறிக்கையை மனுதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

x