விழுப்புரம்: ஊரக வீடுகளின் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டை சரி செய்வதற்கு வழங்கப்பட்ட உத்தரவில் இரண்டு வீடுகள் செய்யப்பட்டுள்ளதால் பயனாளர்களுக்கு பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2001-ம் ஆண்டுக்கு முன்பாக பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஏறத்தாழ 2.50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. கிராமப்புற விளிம்புநிலை மக்களுக்காக கட்டப்பட்ட அந்த வீடுகள் ரூ.2,000 கோடியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுது பார்த்து புனரமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் தற்போதைய நிலையை அறிய, Repairs to Rural houses (ஊரக வீடுகளின் பழுதுநீக்கம்) என்ற பெயரில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கணக்கெடுப்பில், 2000-01 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட 2 லட்சத்து 57 ஆயிரத்து 6 ஓடு வேயப்பட்ட மற்றும் சாய்வான கான்க்ரீட் கூரையுடைய 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள், உடனடியாக பழுது நீக்கம் செய்யப்படுவதற்கு தகுதியான வீடுகளாக அடையாளம் காணப்பட்டன.
அதன் அடிப்படையில், 2000-01 ஆம் ஆண்டு வரை கிராமப்புறங்களில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை 2024 - 25 மற்றும் 2025 - 26 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,954.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.32 ஆயிரம் முதல் 1.85 லட்சம் வரை வழங்கப்பட்டன.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லுார் அருகே தி மழவராய நல்லுாரைச் சேர்ந்தவர் ஆவரம்பூ மகன் கண்ணன் என்பவருக்கு வீடு பழுது நீக்கம் செய்யும் திட்டத்தில் ரூ.52 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்ப்பட்டு முதல் தவணையாக ரூ.15 ஆயிரம் அளிக்கப்பட்டு, அவர் தன் வீட்டை பழுது நீக்கம் செய்துள்ளார்.
இதனிடையே கண்ணனுக்கு அளிக்கப்பட்ட ஆணை நகலை ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த யாரோ ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் கண்ணனுக்கு அளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கண்ணன் தன் வீட்டை பழுது நீக்கம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கண்ணன் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார். இதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முதல் தவணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்பணம் தனக்கு வந்து சேரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
என்னதான் நடந்தது என ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, "வீடு பழுது நீக்கம் செய்ய அளிக்கப்பட்ட ஆணையில் தந்தையின் பெயரை குறிப்பிட்டு கண்ணன் என்று குறிப்பிடாமல் பயனாளிரின் பெயரான கண்ணன் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை ஆவரம்பூ மகன் கண்ணனுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் இதே போன்ற ஆணையை பிச்சைக்காரன் மகன் கண்ணனுக்கும் அளிக்கப்பட்டுள்ளதால், இருவரும் வீடு பழுதி நீக்கம் செய்துள்ளனர். இதில் ஒருவருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.52 ஆயிரம் விடுவிக்கப்படும். பிச்சைக்காரன் மகன் கண்ணன் பழுதி நீக்கம் செய்து வீட்டுக்கான தொகையை எப்படி கொடுப்பது என விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை குழம்பியுள்ளது" என்று தெரிவித்தனர்.