சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பெண்கள் உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் (யுஜிசி) மணிஷ் ஆர்.ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் சவால்களை எதிர்கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் கவுரவிக்கப்படுகின்றனர். அதன்படி நடப்பாண்டு அனைத்து பெண்களுக்குமான உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பிட் இந்தியா இயக்கத்தின் சார்பில் மார்ச் 3 முதல் மார்ச் 9-ம் தேதி வரை மகளிர் தின வாரத்தை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடைபயணம், மிதிவண்டி பேரணி, யோகா அமர்வுகள், விளையாட்டுகள் போன்ற பெண்கள் உடல்நலம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும்.
குறிப்பாக மார்ச் 9-ம் தேதி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தி சிறப்பு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நிகழ்வுகளில் விளையாட்டு வீரர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.