விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராணுவ மது பாட்டில்களை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் ஆழ்வார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆழ்வார் (52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 2 நாட்களுக்கு முன் இவரது வீட்டில் சோதனை செய்த மதுவிலக்கு போலீஸார், ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராணுவ மது பாட்டில்களை விற்பனை செய்ததாக ஓட்டுநர் ஆழ்வாரை கைது செய்தனர். இதையடுத்து ஓட்டுநர் ஆழ்வாரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.