பேச்சிப்பாறையில் 2 நாட்களாக சூறைக்காற்று: மலை கிராம வீடுகளில் பறந்த மேற்கூரைகள் - மக்கள் பாதிப்பு


குமரி: பேச்சிப்பாறை சுற்றுவட்டாரத்தில் இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசுவதால், மலை கிராமங்களில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கடும் சூறைக் காற்று வீசி வருகிறது. பேச்சிப்பாறை அணைப் பகுதியைச் சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஜனவரி மாதத்துக்கு பிறகு கடும் கோடை வெயில் வாட்டி வதைத்ததால் காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சியளித்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பேச்சிப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது.

இதனால், ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. மலை கிராமங்களில் உள்ள வீடுகளும் தப்பவில்லை. பேச்சிப்பாறை அணையின் மறுபக்கம் உள்ள முடவன் பொற்றை, மாங்காய் மலை மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் வேயப்பட்ட தகரம், ஷீட்டுகளாலான மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் தூக்கிச் செல்லப்பட்டன. பொதுமக்கள் அலறி அடித்தவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தனர்.

தற்போது, கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி அலையும் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வழக்கம். எனவே, இரவில் காட்டு மிருகங்களால் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயத்திலேயே பொது மக்கள் தூங்காமல் பீதியுடன் இரவைக் கழித்தனர். நேற்று அதிகாலையில் காற்றின் வேகம் சற்று குறைந்தது.

x