பட்டுக்கோட்டை- தஞ்சை- அரியலூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தயார்: மத்திய அமைச்சர் தகவல்


படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சை: பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிறைவேற்றித் தரப்படும் என மத்திய ரயில்வே மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ.12.37 கோடி மதிப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மத்திய இணை அமைச்சர் வி.சோமண்ணா நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் தஞ்சாவூர் வெ.ஜீவக்குமார், பாபநாசம் டி.சரவணன், கும்பகோணம் கிரி ஆகியோர் அமைச்சரை சந்தித்தனர். அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பை தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவிலேயே அமைக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர்.

பின்னர் மத்திய இணை அமைச்சர் சோமண்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,303 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2,242 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணி 94 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் முடிக்கப்படும். மாநிலத்தில் ரூ. 33,467 கோடிக்கு 22 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மத்திய அரசு நிறைய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், முதன்மை திட்ட மேலாளர் நசீர் அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார். அவரை மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ், எஸ்எஸ்பி லட்சுமி சவுஜன்யா, நிர்வாக அதிகாரி (கோயில்கள்)கு.அருணகிரிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், காரைக்காலில் மேம்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து இணை அமைச்சரிடம், புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் மனு அளித்தார். அப்போது, காரைக்கால்- பேரளம் ரயில்பாதை திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். காரைக் காலில் இருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு ரயில்களை இயக்க வேண்டும். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, காரைக்கால்-பேரளம் ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கோட்ட மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்டோர் ஆய்வுக்குப் பின்னர் சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

x