நத்தம் அருகே காட்டு மாடு தாக்கி கால்நடை மருத்துவர் காயம்: சிகிச்சை அளிக்க சென்றபோது விபரீதம்


திண்டுக்கல்: நத்தம் அருகே சிகிச்சை அளிக்க சென்ற கால்நடை மருத்துவரை, காட்டுமாடு தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடலூரிலிருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ந.புதுக்கோட்டை அருகே சாலையை திடீரென கடக்க முயன்ற காட்டு மாட்டின் மீது சுரேஷ் ஓட்டி வந்த கார் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காட்டுமாடு சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்தது. இது குறித்து காவல் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற வேம்பரளி வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் படுகாயமடைந்த காட்டு மாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லிங்கவாடி கால்நடை மருத்துவர் பழனிச்சாமியை வரவழைத்தனர். காட்டு மாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர் பழனிச்சாமி, அதன் அருகே சென்ற போது மயக்க நிலையில் இருந்த காட்டு மாடு திடீரென ஆக்ரோஷமாக எழுந்து வந்து மருத்துவர் பழனிச்சாமியை தாக்கியது.

அருகில் இருந்த வனத்துறையினர் மாட்டை விரட்டி கால்நடை மருத்துவரை மீட்டனர். காயமடைந்த மருத்துவர் பழனிச்சாமியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, படுகாயமடைந்த காட்டு மாடு உயிரிழந்தது.

x