தகுதியான தொழிலாளர்கள் பற்றாக்குறை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கவலை!


திருப்பூர்: தகுதியான தொழிலாளர்கள் பற்றாக்குறையால், திருப்பூரில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், ஆயத்த ஆடைத் துறையில் திறன் இடைவெளியைக் குறைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், திறன் மேம்பாட்டு மையம் முக்கிய பங்காற்றுகிறது எனவும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

திருப்பூர் கல்லூரி சாலையில் டைட்டன் லீப் திறன் மேம்பாட்டு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி, திறன் மேம்பாட்டு மைய துணைத்தலைவர் என். இ.ஸ்ரீதர், மையத்தின் சிஎஸ்ஆர் தலைவர் ஜே.ஜே.டோமினிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: இத்தகைய முயற்சி திருப்பூர் தொழில்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. திறமையான தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இது உதவும். தகுதியான தொழிலாளர்களின் பற்றாக்குறையால், திருப்பூரில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த காலத்தில் தொழிற்சாலைகள் சுமார் 500 தொழிலாளர்களை பணியமர்த்தின. இன்று 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பணியாற்றுகின்றனர்.

எதிர்காலத்தில் ஒரு தொழிற்சாலைக்கு 15 ஆயிரம் தொழிலாளர்கள் இலக்கு வைத்துள்ளோம். இதுபோன்ற திறன் மேம்பாட்டு மையங்கள், வேலை வாய்ப்பு இடைவெளியை குறைப்பதிலும், உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும். சீனா மற்றும் வங்க தேசம் போன்ற நாடுகளில் இருந்து ஆயத்த ஆடை வாங்கும் நிறுவனங்களை திருப்பூரின் ஆற்றல் திறன் ஈர்க்கிறது. இதனை பயன்படுத்தி தற்போதைய சந்தை பங்கை இரட்டிப்பாக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதி பூண்டுள்ளது, என்றார்.

ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி பேசும்போது, ‘‘அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் இளம்பணியாளர்கள் ஒரு பெரிய அனுகூலமாக இருப்பார்கள். சீனா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் இருந்து ஆர்வத்தை ஈர்ப்பார்கள்” என்றார்.

இந்த மையத்தில் பயிற்சி பெறும் பட்டதாரிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் உறுப்பினர் நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர் என உறுதி அளித்தனர். தொழில்துறையை வலுப்படுத்த மையத்தின் பங்கைப்போல், நிலையான வளம் குன்றா வளர்ச்சியை உறுதி செய்யும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

x