தஞ்சை: கும்பகோணத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்படுத்த வில்லை. இதையடுத்து, யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இதை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தன.
அந்த ஆய்வறிக்கையில், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என ஆய்வுக் குழு குறிப்பிட்டிருந்ததால், கும்பகோணத்தில் உள்ள ஏதேனும் ஒரு வாய்க்கால் மற்றும் 3 குளங்களை நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த அறிக்கையை பிப்.20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஜன.27ம் தேதி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் உள்ளிட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெசன்ட் சாலைப் பகுதியில் உள்ளூர் வாய்க்காலை மூடி சிமென்ட் கான்கிரீட் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த வாய்க்காலில் நீர் செல்ல தடையில்லை. அதில் 3 இடங்களில் ஆளிறங்கும் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஆனால், அந்த அறிக்கையும் தவறாக உள்ளதாக யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் முறையிட்டார். அறிக்கையில் உள்ள தவறு குறித்து அறிக்கையாக மார்ச் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மனுதாரரான ஓய்வு பெற்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களை அளவீடு செய்ய 5 நில அளவையர்களை நியமிக்க வேண்டும் கும்பகோணம் சார் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் உள்ள 5 நில அளவையர்களை குளம் அளவீடு பணிக்கு நியமித்து சார் ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். ஒவ்வொரு நில அளவையரும் தலா 10 குளங்கள் வீதம் நேற்று தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை அளவீடு செய்யவுள்ளனர். ஆய்வு முடிந்த பிறகு, அறிக்கை தயாரித்து, ஒன்றை சார் ஆட்சியரிடமும், மற்றொன்றை மனுதாரர்களுக்கும் வழங்கவும் நில அளவையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில், ஆய்வறிக்கை விவரங்கள் குறித்து மார்ச் 3ம் தேதி நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில் ஆய்வு செய்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.