கரூர்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து வேங்காம்பட்டியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கருப்பத்தூர் வேங்காம்பட்டி பகுதிக்கு கடந்த இரு மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் உடனடியாக காவிரி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று (பிப். 27ம் தேதி) காலி குடங்களுடன் வேங்காம்பட்டியில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, 1 மணி நேரத்திற்கு மேலான நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளப்பள்ளியில் முற்றுகை: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக காவிரி குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன் இன்று (பிப். 27ம் தேதி) காலை 9.30 மணி போல கள்ளப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரங்களுக்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில் மதியம் 11.30 மணிக்கு மேல் லாலாபேட்டை போலீஸார், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் 2 மணி நேர முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.