திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அய்யனூர் கிராமத்தில் கோயிலை கையகப்படுத்த வந்த இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில் முன்பாக நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியில் அய்யனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது. இக்கோயிலை நிர்வாகம் செய்வதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், கோயிலை இந்து சமய அறநிலைய துறையினர் கையகப் படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் அறநிலைய துறைக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தனி வட்டாட்சியர் (கோயில் நிலம்) சாந்தி, அறநிலைய துறை ஆய்வாளர் நரசிம்ம மூர்த்தி, கோயில் செயல் அலுவலர்கள் வினோத் குமார், சிவசங்கரி, சண்முகம் உள்ளிட்ட குழுவினர் கோயில் மற்றும் அதனுடைய சொத்துக்களை கையகப்படுத்த நேற்று கோயிலுக்கு வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு அதிகாரிகளை கண்டித்தும், கோயிலை கையகப் படுத்துவதை கைவிடக் கோரி கோயில் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கோயிலை பொதுமக்களே நிர்வாகம் செய்வதாகவும், இந்து சமய அறநிலைய துறையினர கையகப்பபடுத்தக் கூடாது எனவும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கோயிலை நிர்வாகம் செய்யும் இரு தரப்பினர், பொதுமக்கள் ஒன்று கூடி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மூலம் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தர்ணாவை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளும் கோயிலை கையகப்படுத்துவதை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.