சென்னை: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமார் அவர்கள் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று (27.07.2025) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கவிருந்த கழக அமைப்புச் செயலாளர், அன்புச் சகோதரர் ஜெயக்குமார் அவர்களையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் ஆறுமுகம் அவர்களையும், கழக மகளிர் அணி இணைச் செயலாளர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களையும், பல்வேறு கழக நிர்வாகிகளையும் மற்றும் தொண்டர்களையும் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறையால் கைது செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள பாசிச ஸ்டாலின் மாடல் அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
அஇஅதிமுக-வைக் கண்டாலே இந்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும் , சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம்.
பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள ,அனைவரும் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள அன்புச் சகோதரர்கள் ஜெயக்குமார், திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், சகோதரி மரகதம் குமரவேல் , கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத்தெரிவித்துள்ளார்