சாலையில் கிடந்த பையில் ரூ.5 லட்சம் பணம்: காவலர்களிடம் ஒப்படைத்த நெல்லை விவசாயிக்கு பாராட்டு


நெல்லை: புளியங்குடி டி.என்.புதுக்குடி, கற்பகம் வீதி 1-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (50). விவசாயியான இவர், தனது மனைவி ஜோதியுடன் விவசாயப் பணிக்காக டி.என்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, சாலையில் கிடந்த மஞ்சள் பையில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தன. அக்கம்பக்கத்தில் விசாரித்தார். ஆனால், பணத்தை தவற விட்டவர் யார் என்பது தெரியாததால், புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஷியாம் சுந்தரிடம் பணத்தை ஒப்படைத்தார். அதில் ரூ.5 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், புளியங்குடியில் மளிகைக் கடை நடத்தி வரும் பால முருகன் (44) என்பவர், தனது நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப் பதாகவும், அதனை மீட்க ரூ.5 லட்சம் பணத்துடன் வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பணத்தை தவற விட்டதாகவும் கூறி, காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்தார்.

பணம் இருந்த பையின் அடையாளத்தையும் கூறினார். இதையடுத்து, தங்கச்சாமி மூலம் பணத்தை பாலமுருகனிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தங்கச்சாமியை போலீஸாரும், பால முருகனும் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.

x