மதுரை: ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையம் 700 பயணிகளை கையாளுவதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், கொழும்ப, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவிலுள்ள பினாங்குக்கு இரவு நேர விமான சேவையும் சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ளது. அதிகரித்துள்ள பயணிகளின் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதிகளால் மதுரை விமான நிலையம் 3-ம் நிலையில் இருந்து 2-ம் நிலைக்கு தரம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், மதுரை விமான நிலையம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”மதுரை விமான நிலையத்துக்கு ஒரு வாரத்துக்கு 140 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையம் உள், வெளிநாட்டு பயணிகள் 700 பேரை கையாளுவதாகவும், இதன் மூலம் ஓராண்டில் சுமார் 1.50 மில்லியன் பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஒரு மணி நேரத்தில் உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் தலா 350 பயணிகளை கையாளும் வகையில் பல்வேறு வசதிகளும் உள்ளன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்தான் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்றனர்.