“எந்த விகிதாச்சார அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு?” - மத்திய அரசுக்கு ஆ.ராசா கேள்வி


மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு எந்த விகிதாச்சார அடிப்படையில் அமையும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ஆ.ராசா கூறியதாவது: மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “விகிதாச்சார அடிப்படையில் மறுசீரமைப்பு தொகுதிகள் அமையும்போது, தமிழகத்தில் ஒரு தொகுதிகூட குறையாது” என்று கூறியுள்ளார். ஆனால், தொகுதிகள் அல்லது மக்கள்தொகை இதில் எந்த விகிதாச்சார அடிப்படையில் மறுவரையறை என்ற தகவல் இல்லை. அதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

ஆனால், இதற்கு விளக்கம் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் உயரும்” என்று கூறியுள்ளார். அமித் ஷா சொல்லாமலே, இப்படி ஒரு புது கருத்தை அண்ணாமலை கூறியுள்ளது தவறு. தொகுதிகள் எண்ணிக்கை குறையக்கூடாது என்பது மட்டுமின்றி, வடமாநிலங்களில் மக்கள்தொகை அடிப்படையில் அதிக தொகுதி கூட்டப்பட்டால் அதுவும் அநீதிதான்.

எனவே 1971 மக்கள்தொகை கணக்கீடு அடிப்படையில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அப்படியே உயர்த்த வேண்டும். 1971 மக்கள்தொகை அடிப்படையில் எல்லோருக்கும் தொகுதிகளை உயர்த்தினால் தமிழகத்துக்கும் தொகுதிகள் உயரும். இவ்வாறு அவர் கூறினார். திமுக சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உடன் இருந்தார்.

x