திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் சுற்றுச்சுவர் மட்டுமே உள்ள சுடுகாட்டுக்கு, ஊராட்சி நிர்வாகம் வணிக பயன்பாட்டுக்கான வரி விதித்து வசூலித்த அலுவலர்களை மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண் கண்டித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் தலைமையில் சிறுபான்மையினர் சமுதாய தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் வா.சம்பத், ஆட்சியர் செ.சரவணன், எம்பி ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த மதம் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். தனது தாயார் உடல் நலம் குன்றிய நிலையில் ஆதார் அட்டை பெற முடியவில்லை என புத்த துறவி ஒருவர் கோரிக்கை விடுத்தார். இதை கவனத்தில் கொண்ட ஆணையத் தலைவர் அருண், ஆதார் மைய அதிகாரியை அழைத்து உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று தாயாருக்கு ஆதார் அட்டை வழங்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு மயானத்துக்கு இடம் ஒதுக்க கேட்டுக்கொண்டனர். அதற்கு பதில் அளித்த அருண், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொதுவாக ஒரு இடம் ஒதுக்கலாம். அதை விட்டுவிட்டு அனைத்து ஊர்களிலும் தனியாக கல்லறை அமைக்க இடம் தேர்வு செய்தால் தமிழ்நாடு கல்லறை நாடாகி விடும் என்றார்.
நீண்டகாலமாக புறம்போக்கு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வட்டாட்சியரை அழைத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
சீலப்பாடியில் ஆலய வழிபாட்டுத் தலம், சுடுகாட்டுக்கு, ஊராட்சி நிர்வாகம் வணிக பயன்பாட்டில் உள்ளதாக அதிக வரி விதித்துள்ளனர். வழிபாட்டுத் தலத்துக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி விதிக்கக் கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இதேபோல சுற்றுச் சுவர் மட்டுமே உள்ள சுடுகாட்டுக்கு வணிக மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.
வேண்டும் என்றே உள்ளாட்சியும், மின்வாரியமும் கூடுதல் கட்டணம் செலுத்த வைத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பேசிய ஆணைய தலைவர் அருண், வழிபாட்டுத் தலத்துக்கும் சுடுகாட்டுக்கும் வணிகம் செய்யும் இடத்துக்கான வரி, வணிக மின் வரி விதித்ததற்கு கண்டிப்பு தெரிவித்து அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள், மாவட்ட எஸ்.பி. பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திலகவதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.