தேனி: வருஷநாடு மலைப் பகுதியில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45), தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (55). விவசாயி களான இருவரும் கோவில்பாறை கண்மாய் பகுதியில் உள்ள தங்களது நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மணிகண்டன், கருப்பையா இருவம் தங்கள் தோட்டத்தில் பறித்த எலுமிச்சை பழங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது மறைந்திருந்த கரடி திடீரென கருப்பையா மீது பாய்ந்து தாக்கியது. அருகில் இருந்த மணி கண்டனையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற கண்டனூர் வனத் துறையினர் மற்றும் கடமலைக் குண்டு காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.