கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா பணிகள்: இலங்கை அரசு ரூ 1 கோடி ஒதுக்கீடு


கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம்

ராமேசுவரம்: மார்ச் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் கச்சத்தீவில் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலய திருவிழா பணிகளுக்காக இலங்கை அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 8 ஆயிரம் வரையிலும் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக குடிதண்ணீர், உணவு, கழிப்பறை வசதி, மின்சார விளக்கு, படகுத்துறை, தற்காலிக கூடாரங்கள் உள்பட பல்வேறு வசதிகள் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் முன்னிலையில் இலங்கை கடற்படை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணிகளுக்காக இலங்கை அரசு இலங்கை ரூ. 3 கோடி 20 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.

நிகழ்ச்சி நிரல்: மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தொடர்ந்து திருஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.

மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும்.

x