அதிராம்பட்டினத்தில் அதிர்ச்சி: வீட்டுக்குள்ளே அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலம்


தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி புஷ்பவள்ளி (70). இவர்களுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள். இதில், 2 மகள்கள் உயிரிழந்துவிட்டனர். மகன் வெளிநாட்டிலும், மற்ற 2 மகள்கள் திருமணமாகி வேறு இடங்களிலும் வசித்து வருகின்றனர்.

கணவர் உயிரிழந்துவிட்டதால், புஷ்பவள்ளி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, கடந்தாண்டு நவம்பர் மாதம் திடீரென புஷ்பவள்ளியைக் காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கடந்தாண்டு நவ.4-ம் தேதி அதிராம்பட்டினம் போலீஸில் புகார் அளித்தனர். இந்நிலையில், புஷ்பவள்ளியின் மருமகள் உமா ராணி, நேற்று முன்தினம் புஷ்பவள்ளி வசித்த வீட்டை சுத்தம் செய்ய சென்ற போது, சமையலறையில் அழுகிய நிலையில் புஷ்பவள்ளியின் உடல் கிடந்தது.

தகவலறிந்து அதிராம்பட்டினம் போலீஸார் சென்று புஷ்பவள்ளி உடலை எடுத்து, பிரேதப் பரிசோதனை முடித்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புஷ்பவள்ளியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x