‘மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது; முதல்வர் பொய்சொல்கிறார்’ - கோவையில் அமித்ஷா உறுதி!


கோவை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

கோவை பீளமேடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பாஜக மாவட்ட அலுவலகத்தை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இதேபோன்று, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான பாஜக அலுவலகங்களையும் அமித் ஷா காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமித்ஷா, “உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழில் என்னால் பேசமுடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

திமுகவின் மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி. தமிழ்நாட்டில் ஊழல் முடிவுக்கு கொண்டு வரப்படும். குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டுவோம். மாநிலத்தில் இருந்து தேச விரோத செயல்களை வேரறுப்போம். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வென்றதைவிடப் பெரிதாக இங்கு வெல்வோம். ஊழல் செய்வதில் திமுகவினர் மாஸ்டர் டிகிரி முடித்துள்ளனர்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது. தென்னிந்திய மக்களுக்கு நாடாளுமன்றத் தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். நிச்சயமாக தொகுதிகள் குறைய வாய்ப்புகளே இல்லை. நான் இங்கு உண்மையை கூறியுள்ளேன். எனக்கு நீங்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை யுபிஏ அரசு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியது. அதுவே மோடி அரசு, கடந்த பத்து வருடங்களில் ரூ. 5,08,337 கோடியை வழங்கியுள்ளது. மேலும், மோடி அரசு ரூ. 1,43,000 கோடியை தமிழ்நாடு உள்கட்டமைப்புக்காக வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் வெளி வந்துவிடக் கூடாது என்பதற்காகதான் முதலமைச்சரும், அவரது மகனும் புதுப்புது பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள். திமுக ஆட்சி அவலங்களை பாஜக தொண்டர்கள் வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் மோடி தமிழ்நாடு வளர்ச்சிக்காகப் பல கோடிகளை கொடுத்துள்ளார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளைத் தமிழக மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்

x