திருநெல்வேலி: தீண்டாமை கடைபிடிக்காத தெற்கு பாப்பான்குளம் கிராமத்துக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி மயிலாடும்பாறை சமுதாய நலக்கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.9.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் வழங்கினார். மேலும், ரூ.35 லட்சம் மதிப்பில் உலர் களத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கை ஆட்சியர் திறந்துவைத்தார்.
பின்னர் அரசுத் துறைகளின் விழிப்புணர்வு கண்காட்சியை திறந்துவைத்து ஆட்சியர் பேசியதாவது: விவசாயம் சார்ந்த கிராமமாக இருப்பதால் இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீண்டாமை கடைபிடிக்காததாக தெற்கு பாப்பான்குளம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை கிராம முன்னேற்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.
இம்முகாமில் 114 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 68 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 46 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ராஜசெல்வி, மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன், தனித்துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.