சீர்காழியில் பாட்டி, பேத்தி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை


மயிலாடுதுறை: சீர்காழியில் பாட்டி, பேத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெருவைச் சேர்ந்தவர் ராபியா பீவி. இவர், 2011ம் ஆண்டு ஆக.21ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது வீட்டில், ராபியா பீவியின் மகன் சமீரா பானுவும் (19), மாமியார் கதீஜா பீவியும் (60) வீட்டில் இருந்தனர். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ராபியா பீவி அன்று இரவு வீடு திரும்பியபோது, சமீரா பானுவும், கதீஜா பீவியும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இது குறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இவ்வழக்கு 2015-ம் ஆண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கொலை வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் தினேஷ் குமார் ( 32), புதுப்பாளையம் சுரேஷ் குமார் (27), காராமணிகுப்பம் கமல் (30), செல்லாங்குப்பம் ஆனந்த் ( 27) ஆகிய் 4 பேரை 2018-ம் ஆண்டு கைது செய்தனர். விசாரணையில், நகை, பணத்தை திருடும் நோக்கத்துடன் அவர்கள் வந்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட தினேஷ்குமார், சுரேஷ்குமார், கமல், ஆனந்த் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.

x