கோவை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் விஜய் இணைந்து கொண்டால் கணிசமான இடங்களை வெல்ல முடியும் என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தார்.
இது குறித்து, கோவையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: "திமுக ஆட்சியில் பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் மக்கள் நாள்தோறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் நகர தொடங்கி யுள்ளனர். பாஜக இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காகவும், திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.
ஆனால் சிறுபான்மையினர் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். நடிகர் விஜய் தனித்து நின்றாலும் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. அவர் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொண்டால் கணிசமான இடங்களை வெல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.