சென்னை: தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நடிகை, வழக்கறிஞர், அரசியல்வாதி என்ற பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் ரஞ்சனா நாச்சியார். சில மாதத்துக்கு முன்னர், மாநகரப் பேருந்தில் தொங்கிய மாணவர்களை அடித்து இறக்கிய அவரது காணொலி பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், அவர் வகித்து வந்த தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் பாஜகவில் இருக்க வேண்டுமா? என கேள்வியெழுப்பியது.
என்னைப் பொருத்தவரை மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு இயங்க முடியவில்லை. என்னை சிறப்பாக இயக்க பாஜக தவறிவிட்டது. பெண்களுக்கு முன்னேற்றம் தரும் தலைமை என்ற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொறுப்பில் இருந்து விலகியதற்கான சில காரணங்களைச் சொல்ல முடியும், சிலவற்றை சொல்ல முடியாது. நிதி கொடுக்க மாட்டோம் என்னும் போக்கை ஆணவமாகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவுமே பார்க்கிறேன். விலகுவதற்கான எவ்வித அழுத்தமும் இல்லை. விரைவில் அடுத்த பயணம் குறித்து அறிவிப்பேன்’’ என்றார்.